மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாராஷிவ் மாவட்டம் உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில், காலையில் இருந்தே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கவுரவம் செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காவல் அதிகாரிகள் அனைவரும் சீருடையில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அப்போது, மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டு நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக அதிகாரிகள், அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே உயிர் பிரிந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடமையின் போது உயிரிழந்த மோகன் ஜாதவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சக காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நாட்டுக்காக இறுதி மூச்சு வரை சேவையாற்றிய அவரது உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரிடையே ஈடு செய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

