சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக, உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாட்டின் அனைத்து வயது பெண்களையும் உள்ளடக்கிய,’தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தை (TNWESafe) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் 14 வயது மாணவிகளுக்கான கருப்பை வாய் இலவச தடுப்பூசி திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இதன் பிறகு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான்.எந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்தாலும் பெண்களுக்கு அதிகம் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் இன்னும் அதிகமாக வெளியே வர வேண்டும். உயர்பொறுப்புகளில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் இருக்க வேண்டும்; பெண்கள் இந்த சமூகத்தின் முதுகெலும்பு; பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது. பெண்களின் முன்னேற்றத்துக்காக கலைஞர் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். பெண்களின் சம பங்களிப்பை அதிகரிக்க இதுவரை இல்லாத வகையில் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்க தோழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகையால் பெண்களின் சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகியவை கூடியுள்ளன. பெண்கள் பட்டம் வாங்குவதை உறுதிசெய்ய புதுமைப்பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் மூலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு பெட்டகங்கள் வழங்குகிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். அரசின் காலை உணவுத் திட்டத்தால் பெண்களின் சுமை குறைந்துள்ளது. 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை அடைய பெண்கள்தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆண் – பெண் இடையிலான பாலின இடைவெளியை குறைத்தால் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்க, சுதந்திரமாக வாழ, மரியாதையான ஊதியம் பெற, தொழில் முனைவர்களாக மாற, எந்தவித அச்சமின்றி வாழ திராவிட மாடல் அரசு உரிய கட்டமைப்பை உருவாக்குவோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

