திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.
அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ரஷ்யா குடியிருப்பு பெற்று தருவதாக ரஷ்யா -உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மகனை மீட்க என்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். நான் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் 15 கட்சிகளை சேர்ந்த 68 எம்.பி.க்களை சந்தித்து, கையெழுத்து பெற்று இதுபோன்று பல மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ரஷ்யாவில் சிக்கி உள்ளதை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். இதன் அடிப்படையில், அந்த மாணவர் கிஷோர் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று மியான்மர் நாட்டுக்குச் சென்ற தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மதன்ராஜ், சித்திரை செல்வன், நவீன் குமார் ஆகிய மூன்று வாலிபர்கள் ஆன்லைன்
குற்றங்களில் ஈடுபடுத்த சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வாறு சிக்கி இருந்த அந்த இளைஞர்களையும் வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மீட்டு உள்ளோம். கடந்த ஆண்டில் மட்டும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கானோர் இளைஞர்கள் வெளிநாடுகளில் இவ்வாறு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற எனது பணி, எனக்கு மிகுந்த
மன நிறைவை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு,மணவை தமிழ்மாணிக்கம், பகுதிச் செயலாளர்கள் ஆசிரியர் முருகன், ஜங்ஷன் செல்லத்துரை,இணையதள ஆலோசகர் சுல்தான்,வட்டச் செயலாளர் சாதிக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

