உலக அளவில் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாக விளங்கும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு விளம்பரம் இல்லா சேவையை வழங்க புதிய கட்டணத் திட்டத்தை (Subscription Plan) அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் குறுஞ்செய்தி சேவையாகத் தொடங்கி, இன்று வீடியோ கால், கோப்புகள் பகிர்தல், ஸ்டேட்டஸ் எனப் பல்வேறு பரிமாணங்களை எட்டியுள்ள வாட்ஸ்அப், தொழில்நுட்ப உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
மெட்டா நிறுவனம் தனது வருவாயைப் பெருக்கும் நோக்கில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையே விளம்பரங்களைக் கொண்டு வந்தது. இந்த விளம்பரங்கள் பயனர்களுக்குச் சில நேரங்களில் இடையூறாக அமைவதாகப் புகார்கள் எழுந்தன.
பயனர்களின் இந்தச் சிரமத்தைப் போக்கும் வகையிலும், அதே சமயம் வருவாயை ஈட்டும் வகையிலும், ‘விளம்பரம் இல்லா’ (Ads-free) புதிய சேவையை மெட்டா அறிமுகம் செய்யவுள்ளது. இச்சேவையைப் பெற விரும்புவோர் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டணமாக சுமார் €4 (இந்திய மதிப்பில் சுமார் ₹433) நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

