Skip to content

பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளியின் பின்புறம் குடியிருப்புகளும், புதர்மண்டிய செடிகளும் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் சாரை, கட்டுவிரியன் உட்பட பலவகை பாம்புகள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிவதும், அதனை கண்டு மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனிடையே நேற்று அப்பள்ளியில் சுற்றி வந்த ஒரு சாரை பாம்பை பிடிப்பதற்காக குன்னூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். ஆனால், அடுத்தடுத்தாக பள்ளியில் 6 பாம்புகள் மீட்கப்பட்ட சம்பவம் ஆசிரியர் மற்றும் மாணவிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில்,‘‘குடியிருப்பு பகுதிகளில் வெளியாகும் கழிவுநீராலும், புதர்மண்டிய செடிகளாலும் பாம்புகள் உலா வருகிறது.

மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர் செல்வதால் மாணவிகள் சிரமமடைவதுடன், நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. பள்ளி வளாகத்தில் சுற்றி திரியும் பாம்புகளால் எங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

இதுவரை அப்பள்ளியிருந்து 16 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட உபதலை ஊராட்சி நிர்வாகம் புதர்களை அகற்றி கழிவுநீர் பள்ளி வளாகத்தில் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பு மீட்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலா மூச்சுக்குன்னு குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாக பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பத்திரமாக பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்பு சுமார் 12 அடி நீளம் கொண்டது.குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாம்பை வனத்துறையினர் பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு உத்தரவின்பேரில் பிடிப்படிப்பட்ட ராஜநாகத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

error: Content is protected !!