இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டம் ஹரீர் கிராமத்தைச் சேர்ந்த யூடியூபர் விக்சித் ரானா (19). இவர் கடந்த 23-ம் தேதி பியூஷ் குமார் (14) என்ற சிறுவனுடன் மல்ஹொடா பகுதியில் உள்ள பனிமலைக்கு வீடியோ எடுக்கச் சென்றுள்ளார். விக்சித் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விக்சித் ரானா மற்றும் சிறுவன் பியூஷ் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் கடந்த மூன்று நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று பனிபடர்ந்த வனப்பகுதியில் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. அப்போது மீட்புக் குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு காட்சி தென்பட்டது. உயிரிழந்த விக்சித் ரானாவின் உடலுக்கு அருகிலேயே அவரது செல்லப்பிராணி நாய் மூன்று நாட்களாகப் படுத்துக் கிடந்து, எஜமானரின் உடலைப் பாதுகாத்து வந்துள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உயிரிழந்த எஜமானருக்காக அந்த நாய் காத்து நின்ற விசுவாசம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த நாயும் பத்திரமாக மீட்கப்பட்டது.

