திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் புதிதாக ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் திறப்பு விழாவிற்காக கட்டிடத்தில் மின்விளக்கு அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
முசிறி அருகே உள்ள பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (20) புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் நின்று மின்விளக்குகளை பொருத்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், நிலைதடுமாறி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்தில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கருணாகரனை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கருணாகரன் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் வழக்குப்பதிந்து கருணாகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கருணாகரன் முசிறியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழா நடைபெற இருந்த நிலையில் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

