UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள் 2026 தாமதமான நடவடிக்கையாக இருந்தாலும், பாகுபாடு மற்றும் அக்கறையின்மையால் சீரழிந்த உயர்கல்வி அமைப்பை சீரமைக்கும் வரவேற்கத்தக்க முயற்சியாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக பட்டியல், பழங்குடி மாணவர்களுக்கு எதிரான அநீதிகளை குறைக்கும் வகையில்.பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.
தென்னிந்திய மாநிலங்கள், காஷ்மீர், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் தொல்லைகள் நடைபெறுவது கவலைக்குரியது. இத்தகைய சூழலில் சமத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் அத்தியாவசியமானதாகிறது, இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.புதிய விதிகளில் சாதிய பாகுபாட்டை ஒழிப்பது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்குவது பாராட்டத்தக்கது.
மண்டல் குழு பரிந்துரைகளுக்கு எதிரான போராட்டங்கள் போலவே, இந்த விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் பிற்போக்கு மனநிலையால் உந்தப்பட்டவை. ஒன்றிய அரசு இந்த அழுத்தங்களுக்கு ஆட்படாமல் விதிகளின் மைய நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடாது.ரோகித் வெமுலா போன்ற வழக்குகளில் துணைவேந்தர்களுக்கு குற்றச்சாட்டு இருந்த நிலையில், புதிய விதிகளின்படி நிறுவனத் தலைமையின் கீழ் சமத்துவ குழுக்களை அமைப்பது அவற்றின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
குறிப்பாக பல உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தக் கவலை வலுப்பெறுகிறது.மாணவர்கள் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை ஒழிப்பது, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பது போன்றவற்றில் பாஜக அரசு உண்மையான அக்கறை கொண்டிருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்தி அமைப்புரீதியான குறைகளை களைய வேண்டும். முறையான நடவடிக்கைகளை எடுத்து செயல்படுத்த வேண்டும்’ எனவும் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

