தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தைச் சேர்ந்த தசரத் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோருக்கு சுரேகா (26) என்ற மகள் உள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி வரும் சுரேகாவிற்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சுரேகாவிற்குத் திருமண ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேகா, தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெற்றோரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார்.
கடந்த 24-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த தாயிடம், முதுகுவலியைச் சரி செய்யப் புதிய மருந்து வந்துள்ளதாகக் கூறி அதிக வீரியம் கொண்ட மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் தாய் மயக்கமடைந்த நிலையில், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தையிடமும் கால்வலிக்கு மருந்து எனக் கூறி அதேபோல ஊசி செலுத்தியுள்ளார். அதிக அளவிலான மயக்க மருந்து உடலில் ஏறியதால், சில மணி நேரங்களிலேயே தசரத் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
பெற்றோர் இறந்ததை உறுதி செய்த சுரேகா, தனது அண்ணனுக்கு போன் செய்து அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், ஒரே நேரத்தில் இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதில் சந்தேகமடைந்த அவரது அண்ணன் போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு கிடந்த இரண்டு சிரிஞ்சுகளைக் கைப்பற்றி சுரேகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தனது காதலுக்குத் தடையாக இருந்ததால் பெற்றோரை மயக்க ஊசி செலுத்திக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் சுரேகாவை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

