கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இந்தியாவில் தங்குவதற்கு எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி அங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் பிடித்துள்ளனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வங்கதேசத்தில் தலா 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து புரோக்கர்கள் மூலம் கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திருப்பூரில் பணிபுரிந்துவிட்டு, கடந்த ஒரு மாதமாகவே அன்னூர் பகுதியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பிடிபட்ட 11 பேரையும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தற்காலிக முகாமுக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த விவகாரம் குறித்து சென்னையில் உள்ள வெளிநாட்டினருக்கான மண்டல பதிவாளர் அலுவலகத்திற்கும், அங்கிருந்து வங்கதேச தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அன்னூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

