கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச் சிலை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களால் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசலிங்கேசுவரர் சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, யாக சாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இன்று காலை பூஜிக்கப்பட்ட கலசங்களைச் சிவனடியார்கள் தலையில் சுமந்து வர, சிவ வாத்தியங்கள் முழங்க அரசலிங்கேசுவரருக்குப் புனித தீர்த்தத்தால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து நந்தி பகவான், கணபதி மற்றும் ஹனுமன் சிலைகளுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவின் போது இசைக்கப்பட்ட சிவ வாத்தியங்களின் ஓசைக்கு ஏற்ப பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பக்திப் பரவசத்துடன் சாமி ஆடினார்கள். ஜீவஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

