தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரைவுப் பட்டியலில் இருந்து உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (ஜனவரி 30) முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் 10 நாட்கள் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை சுமார் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக வாக்காளர் அடையாள அட்டை எண் ஒதுக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, 15 நாட்களுக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் வண்ண புகைப்பட அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இடம் பெயர்ந்த காரணத்திற்காகப் பெயர் நீக்கப்பட்டவர்கள், இந்த கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

