உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகக் கேலி செய்ததைக் கேட்டு மனமுடைந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் சீனிவஸ்தா மற்றும் தனு சிங் தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். கடந்த புதன்கிழமை அன்று உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய இவர்கள், வீட்டில் தனு சிங்கின் தங்கை அஞ்சலியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ராகுல் தனது மனைவி தனு சிங்கை “குரங்கு” என்று அழைத்து கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தனு சிங் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் ராகுல் இரவு உணவு வாங்க கடைக்குச் சென்றபோது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனு சிங் தனது அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உணவு வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய ராகுல், கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

