வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் வெளிநாட்டு வேலைக்காகத் தனது நண்பர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா என்பவரை அறிமுகம் செய்துகொண்டார். பிரசன்னா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய விமல் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட மொத்தம் 58 பேர், பிரசன்னா, அவரது மனைவி வசுமதி மற்றும் ரித்தீஷ் ஆகியோரிடம் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.1,35,55,000 பணத்தை வழங்கியுள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு வேலைக்கு அனுப்பாமல் காலம் கடத்திய பிரசன்னா, இது குறித்துக் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமல், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட பிரசன்னா, வசுமதி மற்றும் ரித்தீஷ் ஆகிய மூவரையும் தீவிரமாகத் தேடி வருகிறார்.

