Skip to content

எரிந்த நிலையில் ஆசிரியர் உடல் மீட்பு… சேலத்தில் பரபரப்பு

சேலம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி (80), இன்று காலை அவரது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை ராமசாமியின் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உடல் கருகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் வெளிக்கதவு தாழ்ப்பாள் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டால் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், யாரோ அவரை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு தீ வைத்து எரித்துக் கொலை செய்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராமசாமி அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் சொத்துத் தகராறு அல்லது நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகளைச் சேகரித்துள்ளனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்றிரவு அல்லது இன்று அதிகாலையில் ராமசாமி வீட்டிற்கு யாராவது வந்து சென்றார்களா? என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமசாமியின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!