அரியலூர் புறவழிச் சாலையில் சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு, பேருந்திலிருந்து கீழிறங்கி சாலையை பல மணி நேரம் கூட்டி சுத்தம் செய்த சென்னை இளைஞரின் மனிதாபிமானம் அனைவரின் பாராட்டுதலுக்குரியதாக அமைந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சுற்றி பல சிமெண்ட் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளாலும், பெரம்பலூரில் உள்ள மலைகளில் இருந்து வீடு கட்டுவதற்கு தேவையான ஜல்லி ஏற்றி வரும் லாரிகளாலும் சாலைகளில் ஜல்லிக்கட்டுகளும் சுண்ணாம்பு கற்களும் இணைந்து அடிக்கடி விபத்து ஏற்படுவது இயல்பு. அதிக அளவிலான கனரக வாகனங்கள் பயணிக்கக்கூடிய இந்த சாலை பல விபத்துக்களால் பல பேரின் உயிரை காவு வாங்கி உள்ளது.
இந்த சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணம் செய்வதென்பது சாகசம் மிகுந்த உணர்வை தரக்கூடியதாக இருக்கும்.
இந்த நிலையில் அரியலூர் – பெரம்பலூர் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே, பெரம்பலூரில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்றிலிருந்து தவறி சாலை முழுவதும் ஜல்லி

கற்கள் கொட்டிக் கிடந்தது. சுமார் 1/4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை முழுதும் ஆக்கிரமித்துக் கிடந்த ஜல்லிக்கற்களால் கட்டுப்பாட்டை இழந்து காலையில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்துக்குள்ளாகி இருக்கிறார்.
விபத்துக்குள்ளான இளைஞனின் இருசக்கர வாகனத்துக்கு பின்னால் அரசு பேருந்தில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து, தஞ்சையை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில், தனது நண்பனை பார்ப்பதற்காக பயணம் செய்த சென்னை கொளத்துனதூரைச் சேர்ந்த தினேஷ்குமார் எனும் இளைஞர் இதனைக் கண்டு பதறிப் போய் உள்ளார். விபத்துக்குள்ளான அந்த இளைஞரை எண்ணி வருந்திய தினேஷ்குமார் உடனடியாக பேருந்தை நிறுத்த சொல்லி கீழே இறங்கி, விபத்தில் சிக்கிய இளைஞனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க உதவி செய்துள்ளார். பின்னர் தனது நண்பனை காண தஞ்சாவூர் செல்லாமல், இளைஞனின் விபத்துக்கு

காரணமான சாலை முழுவதும் சிதறி கிடந்த ஜல்லி கற்களை அகற்றினால் மட்டுமே, இந்த சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க கூடும் என யோசித்தவர் உடனடியாக எவரையும் எதிர்பார்க்காமல் தனி ஒருவனாக களத்தில் இறங்கினார். அருகில் இருந்த கடையில் துடைப்பம் ஒன்றை வாங்கிக் கொண்டு, சாலை ஓரத்தில் இருந்த சிறிய பேரிக்காடை எடுத்துக் கொண்டு, சாலையை தனி ஒருவனாக சுத்தம் செய்த தொடங்கினார். காலை உணவையும் மறந்து விட்டு, செய்யும் பணியே பெரிதென்று நினைத்து, கடமையே கண்ணாக அங்குலம் அங்குலமாக அந்த பேரிக்காடை வைத்து ஜல்லி கற்களை சாலை ஓரமாக அகற்றி, கூட்டிக் கொண்டே சென்றார். இந்தப் பாதையில் கண்டும் காணாமல் நிற்காது ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் அந்த வேலையில், தனி ஒருவனாக வழிந்தோடும் வியர்வை, காலை வெயில், அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களிலிருந்து எழுந்த புழுதிப்படலம் என எதையும் பொருட்படுத்தாமல் சாலையைக் கூட்டிய தினேஷ்குமாருக்கு உதவி செய்ய எவருக்கும் மனமில்லை. கண்டுகொள்ள எவரும் முன் வராததுதான் சோகம்.
மனிதாபிமானம் மிக்க இருவர் தினேஷ் குமாருக்கு குடிக்க தண்ணீரும் பிஸ்கட்டும் காலை உணவும் வாங்கி கொடுத்து அவரது பணியை பாராட்டினர்.
இன்றைய அவசர உலகில் எது நடந்தாலும் கவலைப்படாது, சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில், முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்காக உதவி செய்ய வந்து, மற்ற எவரும் விபத்தில் சிக்கி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கையில் துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த இளைஞர் தினேஷ் குமார் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்.
பேருந்தில் தஞ்சையை நோக்கி செல்லும் பொழுது விபத்தில் ஏற்பட்ட இளைஞனுக்காக கீழிறங்கி உதவி செய்தேன். பின்னர் அருகில் உள்ள கடை ஒன்றில் சென்று துடைப்பத்தை கடனாக வாங்கி வந்து சாலையை காலை 8 மணி முதல் பல மணி நேரமாக சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.
சாலையில் இதுபோன்று கொட்டிக் கிடக்கும் பட்சத்தில், அதைக் கண்டும் காணாமல் பொதுமக்கள் ஆகிய நாம் கடந்து செல்லக்கூடாது. முடிந்தால் நாமே அதனை சுத்தம் செய்ய முன்வர வேண்டும். இல்லாவிட்டால் உரிய அலுவலரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்க வேண்டும். லாரி டிரைவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் லோடு ஏற்றிச் செல்லும்பொழுது இது போல சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டியபடி செல்லக்கூடாது எனவும் தினேஷ்குமார் அனைவருக்கும் கோரிக்கை வைக்கிறார். மேலும் பசியோடு இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்த தினேஷ்குமார் பல மணி நேரத்திற்கு மேலாக பசியோடு சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு இளைஞருக்காக பதறி துடித்த அந்த மனசு தான் கடவுளுக்கு சமமானது. ராமலிங்க அடிகளாரின் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது போல், கண்ணதிரே நடக்கும் ஒரு துன்ப செயலை கண்டு மனது வாடி தான் செல்லும் பணியையும் மறந்து பல மணி நேரம் வியர்வை சிந்தி உழைத்து மக்களுக்கு நல்லது செய்த அந்த தினேஷ் குமார் என்ற இளைஞன் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் உள்ள திருவிக நகரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

