தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடியான திரைப்படங்களில் நடித்து ‘ஆக்ஷன் கிங்’ எனப் பெயர் பெற்ற இவர், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். “சேவகன்”, “ஜெய் ஹிந்த்”, “தாயின் மணிக்கொடி”, “வேதம்”, “ஏழுமலை”, “சொல்லிவிடவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “சீதா பயணம்” என்ற புதிய திரைப்படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், “சீதா பயணம்” படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தனது தந்தையும் இயக்குநருமான அர்ஜுன் குறித்து கண்ணீருடன் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: “படப்பிடிப்பில் அப்பா மிகவும் கண்டிப்பாக இருப்பார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறோம் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக இருக்கும். அப்பா எப்போதுமே எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்காக மெனக்கெடுவார், கடுமையாக உழைப்பார். முதல்வன் படப்பிடிப்பின் போது, நள்ளிரவு 2 மணிக்கு வந்தார். அவர் கழுத்து எல்லாம் எரிந்து போய் இருந்தது. பார்த்து அனைவருமே பயந்துவிட்டோம். முதல்வன் படத்தில் வீட்டை வில்லன் வெடிகுண்டு வெடித்து எரிந்துவிடுவார்கள் அந்த சீனில், அப்பா விபத்தில் சிக்கி கழுத்து எரிஞ்சி போச்சு, அதை நினைக்கும் போதே இப்பவும் கஷ்டமா இருக்கு” என்றார்.

