Skip to content

நண்பர்களுடன் கால்பந்து விளையாடிய ஷில்லாங் எம்பி மாரடைப்பால் பலி

மேகாலய மாநிலத்தின் ஷில்லாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிக்கி ஏஜே சிங்கான் கால்பந்து விளையாடிய போது மாரடைப்பால் காலமானார். கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மேகாலய மாநிலம் ஷில்லாங் தொகுதியில் போட்டியிட்ட ரிக்கி ஏஜே சிங்கான், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் பாலாவை 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். ‘மக்கள் குரல்’ கட்சியின் சார்பில் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஷில்லாங் அருகே உள்ள மவ்லாய் மவ்லியாங் பகுதியில் நேற்று நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால், மேல் சிகிச்சைக்காக ஜெயாவ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 8.42 மணிக்கு அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சிங்கான் அர்ப்பணிப்புள்ள தலைவர், அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த மாநிலமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

error: Content is protected !!