விஜய் டி.வியின் ‘குக் வித் கோமாளி’ மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகர் புகழ், கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘மெட்ராஸ் மாடர்ன் டூரிசம்’ (Madras Modern Tourism) நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். தனது நண்பர்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது : சினிமா, ஓடிடி மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
“சினிமா என்பது எங்களது உயிர். தற்போது சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய ஹிட் ஆகி வருகின்றன. ஒரு படத்தில் நடிக்கும் ஐந்து பேரை மட்டும் பார்க்காதீர்கள், அதற்குப் பின்னால் உழைக்கும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. எனவே, மக்கள் திரையரங்கிற்குச் சென்று சிறிய திரைப்படங்களைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.”முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆனால் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது ஓடிடி தளங்கள் வந்த பிறகு, மக்கள் ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என அசால்ட்டாக இருக்கிறார்கள். ஓடிடி ரிலீஸ் தேதியை முன் கூட்டியே அறிவிப்பதைத் தள்ளி வைத்தால், அது திரையரங்குகளுக்குப் பயன் உள்ளதாக இருக்கும்” எனத் தனது நேர்மையான கருத்தைப் பதிவு செய்தார்.கதாநாயகனாக நடிக்கும் ஆசை குறித்துக் கேட்டபோது, “அப்படி எல்லாம் இல்லை தலைவா! மக்கள் கொடுப்பது தான் எல்லாம். எனக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை கிடையாது, நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். கதைக்குத் தேவைப்பட்டால் ஹீரோவாகவும் நடிப்பேன். தற்போது 4 படங்களில் நடித்து வருகிறேன்” எனப் பதில் அளித்தார்.
தான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியா மற்றும் சின்னத்திரையில் ஆக்டிவாக இருப்பது பற்றிப் பேசுகையில்,
“கொடுக்கப்படும் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். குக் வித் கோமாளிக்காக வந்த அந்த குழந்தைகளுக்காக ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று தோன்றியது, அதனால் தான் சின்னத்திரையிலும் தொடர்ந்து இயங்கி வருகிறேன்” என்றார்.
சமீபத்தில் ‘4 இடியட்ஸ்’ பட விழாவிலும் “நண்பர்கள் இல்லாமல் நானில்லை” என நெகிழ்ந்து பேசிய புகழ், தற்போது கோவையிலும் தனது நண்பர்களின் நிறுவனத்திற்காக வந்து பேசியது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காமெடியனாகத் தொடங்கி, தற்போது கதையின் நாயகனாக உயர்ந்து வரும் புகழின் இந்த எதார்த்தமான பேச்சு வைரல் ஆகி வருகிறது.

