Skip to content

குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் புகழ்பெற்ற முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மாசி மகப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.

விழா தொடங்கிய நாள் முதல் தினமும் பகலில் பல்லக்கு ஊர்வலமும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குதிரை வாகன வேடுபரி நிகழ்ச்சியும், சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலைச் சுற்றி வலம் வந்த தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பிற்காகப் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

error: Content is protected !!