Skip to content

கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை – தவெக விளக்கம்!

தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் இணை பொதுச் செயலாளரும் தலைமைக் கழக முதன்மை செய்தி தொடர்பாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில், “பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் ஆகியோருடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக” வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் எந்த மட்டத்திலும் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிர்மல் குமார் மேலும் கூறியதாவது, “இதேபோன்ற பொய்ச் செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது. அவையும் உண்மை இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பொதுமக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே திமுகவினரால் இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன” என்றார்.

பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “வாய்மையே வெல்லும்!” என்று அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.இந்த அறிக்கை தவெகவின் தனித்து நிற்கும் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இணையாமல் தனித்துப் போட்டியிடுவது தவெகவின் உறுதியான முடிவு என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மறுப்பு கட்சியின் தொண்டர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!