திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் டைரக்டர் விக்னேஷ் சிவன், இவரும் நடிகை நயன்தாராவும் பல ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு சொந்த பந்தங்களுக்கே அழைப்பு கொடுக்கவில்லை என்ற புகார் ஒரு புறம் இருந்தாலும், ஆடம்பரமாக நடத்தினர். திருமணம் நடந்த ரிசார்ட்டை சுற்றி அடியாட்களை (பவுன்சர்கள்) வைத்து ரசிகர்களை விரட்டிய சம்பவமும் அப்போது நடந்தது.
அதன் பிறகு அவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றனர். அதிலும் பல சட்டப்பிரச்னைகள் ஏற்பட்டு அதுவும் ஒருவழியாக தீர்க்கப்பட்டது. இப்போது உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்டாய் என்ற நிலையில் இருவருக்கும் பெரிதாக மார்க்கெட் இல்லை. நயன்தாரா மட்டும் ஒரு சில படங்களில் முக்கியமில்லாத கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் , நயன் தம்பதியர் தஞ்சை அடுத்த வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலான காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு வந்தனர். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து காரில் கோயிலுக்கு சென்றனர்.
கோயிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். பரிவார தெய்வங்கைளயும் வழிபட்டனர்.நடிகை நயன்தாரா வந்திருப்பதை அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் கோயிலில் குவிந்தனர். அவர்களை கோயில் ஊழியர்களும், பவுன்சர்களும் விரட்டி அடித்தனர். பத்திரிகையாளர்களிடம் கூட அவர்கள் கெடுபிடி செய்தனர்.
பின்னர் அங்கிருந்து கும்பகோணம் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். அங்கும் ரசிகர்கள் திரண்டனர். இவர்கள் அழைத்து வந்த பவுன்சர்கள் தவிர போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. இங்கு கோயில் வளாகத்தில் நின்றிருந்த மாணவிகள் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து காரில் நேற்று மாலை திருச்சி வந்தனர். அவர்கள் சொகுசு காரிலேயே சென்னை போய் இருக்கலாம். அல்லது விமானம் மூலம் சென்னை போய் இருக்கலாம். இரண்டையும் விட்டுவிட்டு மாலை 5 மணிக்கு தேஜஸ் ரயில் மூலம் சென்றனர். இதற்காக நயன் ஜோடி திருச்சி ரயில் நிலையம் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் பட்டாளம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்காமலேயே உள்ளே புகுந்து விட்டனர். ரசிகர்களும், மற்ற பெட்டிகளில் முன்பதிவு செய்திருந்தவர்களும், நயன்தாராவை பார்க்க அவர் இருந்த பெட்டிக்கு வந்தனர். அவர்களை பவுன்சர்கள் அடிக்காத குறையாக தள்ளி விட்டனர். ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் என அனைவருக்கும், ரயில் எப்போது புறப்படுமோ என்ற அவஸ்தை ஏற்பட்டது இத்தனைக்கும் நயன்தாரா ரசிகர்களை கண்டுகொள்ளவில்லை. புறப்படும்போது கூட கைகளை அசைத்து ஒரு ஹாய் சொல்லவில்லை.
ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் சிலர் செல்போனில் படம் எடுக்க முயன்றனர். அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா, படம் எடுக்காத….. படம் எடுத்தால் செல்போன உடைச்சிடுவேன் என ருத்ரதாண்டவமாடினார்.
ரசிகர்களிடம் அன்பாக பேசவும் இல்லை, கைகளை அசைக்கவும் இல்லை. பிறகு ஏன் அவர் ரயிலில் வர வேண்டும் என ரசிகர்கள் மட்டுமல்ல, போலீசாரும் நொந்து கொண்டனர். இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் தந்திரமா இது? என அனைவரும் பேசிக்கொண்டனர்.ரயில் போன பிறகு ரசிர்கள் வெளியே வந்தபோது தான் அவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் சோதனை வந்தது.
பிளாட் பாரம் டிக்கெட் இருக்கா என அனைவரிடமும் சோதனை போட்டனர். டிக்கெட் இல்லாதவர்களை ஓரம் கட்டி உட்கார வைத்தனர். அப்போது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் வந்து சிலருக்கு டிக்கெட் எடுத்து தந்து விடுகிறேன் விட்டு விடுங்கள் என கெஞ்சினார். ஆனாலும் ரயில்வே அதிகாரிகள் விடுவதாக இல்லை. கெடுபிடி நீடித்துக்கொண்டே இருந்தது. நயன்தாராவை பார்த்ததும் போதும், பட்டபாடும்போதும் என ரசிகர்கள் கண்ணீர்மல்கும் நிலையில் இருந்தனர்.