பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த 2 பேரை காப்பாற்றி வீர மரணமடைந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ராஜ்குமாருக்கு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம், அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர் ராஜ்குமார். இவர் கடந்த 12. 7 2020-ல் கிணற்றில் உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு, விஷ வாயு தாக்கி வீரமரணம் அடைந்தார். தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் சேவையை பாராட்டி நாட்டின் உயரிய பதக்கமான வீரதீரச்செயலுக்கான ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது, அந்த பதக்கம் வழங்கும் விழா மராட்டியம் மாநிலம், நாக்பூரில் உள்ள தீயணைப்பு கல்லூரியில் கடந்த ஏப்ரல் 17-ந்தேதி நடைபெற்றது. விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் கலந்து கொண்டு ஜனாதிபதியின் தீயணைப்பு துறையின் பதக்கத்தை தீயணைப்பு வீரர் ராஜ்குமாரின் மனைவியும், பெரம்பலூர்-
அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தின் இளநிலை உதவியாளருமான உமாவிடம் வழங்கினார். இந்த பதக்கம் தமிழகத்தில் இருந்து ஒருவர் பெறுவது தமிழ்நாடு தீயணைப்பு துறை வரலாற்றில் இது தான் முதல் முறையாகும். மேலும் இப்பதக்கத்தின் முறை படி மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் ராஜ்குமாரின் மனைவி உமாவுக்கு வழங்கப்படும். கணவர் ராஜ்குமாரின் பதக்கத்தை பெற்று வந்த உமா தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் டி. ஜி. பி. ஆபாஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. விஜயசேகர், திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா ஆகியோரிடம் காண்பித்து கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்து கொண்டார்.