திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 10 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் மாதா கெபி உள்ளது.
இந்த மாதா கெபியில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும்
பனையகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர் பார்த்தசாரதி அவரது ஆதரவாளர்களுடன் சென்று சந்தியாகப்பர் சிலையை சேதப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற
தலைவரின் கணவர் தரப்பிற்கும் மாதா கோவில் தெரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் வழக்கு கொடுத்திருந்த நிலையில் சர்ச்சைக்கு உள்ளான இடமான கிறிஸ்தவ வழிபாட்டு கெபிக்கு 5 மாதங்களாக சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கெபி எனப்படும் சந்தியாகப்பர் சிலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டதாக
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் இன்று காலை திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது.
சிலையை அகற்றும்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்த முற்பட்டதால் போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.