ஒடிசாவில் கடந்த 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் சுமார் 275 பேர் பலியானார்கள். 1000 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த கோரமண்டல் ரயிலில் இந்திய ராணுவ வீரர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசனும் வந்தார். இவர் மேற்குவங்காளத்தில் ராணுவத்தில் பேரிடர் மீட்பு பிரிவில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக இவர் சொந்த ஊருக்கு வந்தபோது விபத்தில் சிக்கினார்.
விபத்து நடந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போகாத ராணுவ வீரர் வெங்கடேசன், உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மீட்பு படையினரை அங்கு அனுப்ப கோரியதுடன், ரயிலில் இருந்து இறங்கி பலரை காப்பாற்றினார்.
பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். இதுபற்றிய செய்தி நேற்று வெளியானது. இதை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தஞ்சை ராணுவ வீரர் வெங்கடேசனை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
ஒடிசா ரயில் விபத்தில், பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள்.
உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.