பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது.பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின்பேரில், மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்கா சென்றார். அவரை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைய உள்ளதாக தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார். அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சந்திரயான் 3 வெற்றிக்கு பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.