இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் மாற்றியமைக்கும்.
அதன்படி 2023ம் ஆண்டு இன்று தொடங்கியுள்ள நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில், வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்கள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், டிசம்பரில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் ரூ.1,892க்கு விற்பனையான வணிக சிலிண்டர், தற்போது ரூ.1,917ஆக விற்பனை செய்யப்படுகிறது. அந்தந்த ஊர்களின் நிலவரங்களுக்கேற்ப விலையில் மாற்றம் இருக்கும். விலை உயர்வால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
