தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் பட்டாசுகள் விற்பனை செய்ய தாற்காலிகமாக 81 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதலிடம் பிடிப்பது பட்டாசுகள்தான். பின்னரே புத்தாடை மற்றும் இனிப்பு பலகாரங்கள். அந்த வகையில் பட்டாசுகளை விற்பனை அமோகமாக காணப்படும். பட்டாசு விபத்துகளை தவிர்க்கும் வகையில், நிரந்தர மற்றும் தாற்காலிக பட்டாசு கடைகள் வைக்கவும், சில்லரை விற்பனை செய்யவும் அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையொட்டி திருச்சி மாநகரில் நிகழாண்டு, தாற்காலிக கடைகள் வைக்க விண்ணப்பிக்குமாறு மாநகர காவல்துறை சார்பில் அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அனுமதி கேட்டு விண்ணப்பித்த பட்டாசு கடைகளுக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளனவா ? தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளனவா ? விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா ? என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. களஆய்வு மற்றும் பரிசீலனைக்குப் பின்னர் திருச்சியில் (மாநகரில் மட்டும்) தாற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய மொத்தம் 81 கடைகளுக்கு மாநகர காவல் ஆணையர் ந. காமினி அனுமதியளித்துள்ளார்.
தீபாவளியை திருச்சி மாநகர பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், விபத்தில்லா தீபாவளியாகவும் கொண்டாட பட்டாசு விற்பனையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், அனுதியின்றி பட்டாசுக் கடைகள் நடத்தக்கூடாது, அவ்வாறு நடத்தினால் சட்டப்படி குற்றச்செயலாகும். விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.