திண்டுக்கல்லை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ் பாபு. இவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் தவிர்க்க, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 1ம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மதுரை தபால் தந்தி நகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் சோதனை நடத்த சென்ற போலீசாரை அமாலாக்கத் துறையினர் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய புகாரில், ‘மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடி சென்றவர்கள் மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பிலும், டிஎஸ்பி சத்யசீலன் மதுரை தல்லாகுளம் போலீசில் அமலாக்கத் துறையினருக்கு எதிராக ஒரு புகாரை கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகளை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் (பெயர் குறிப்பிடாமல்) மீது தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக அமலாக்கத் துறையினருக்கும் சம்மனும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் மாறி, மாறி புகார்கள் அளிக்கப்பட்டதால் விசாரணையை தல்லாகுளம் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே அமலாக்கத் துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், தற்போது இந்த விவகாரமும் சூடுபிடித்துள்ளது. போலீசார் தரப்பில் கேட்டபோது, ‘லஞ்சம் வாங்கிய அங்கித் திவாரியின் கைதை தொடர்ந்து மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு முறையான அனுமதியை பெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு சென்றபோதிலும் உள்ளே விடாமல் தடுத்தும், அரசு பணி செய்யவிடாமலும் வாக்குவாதம் செய்த அமலாக்கத் துறையினர் மீது பெயர் குறிப்பிடாமல் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்தாலும், இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை (டிச., 26) விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். விசாரணைக்குப் பிறகு பணி செய்யவிடாமல் தடுத்த அமலாக்கத் துறையினரின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படும். அதேநேரத்தில் அமலாக்கத் துறை சார்பில், டிஜிபியிடம் கொடுத்த புகாரிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்ந்த ஒரு சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.