Skip to content

திருச்சி ஜி கார்னர் அருகே ரயில்வே பாலத்தில் திடீர் பழுது….. போக்குவரத்து மாற்றம்

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி-கார்னர் மைதானம் அருகே உள்ள ரயில்வே பாலம் பழுது – போக்குவரத்து மாற்றம்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் 2 ரயில்வே பாலங்கள் உள்ளது. இதில், இடதுபுறமுள்ள திருச்சி – சென்னை வழித்தட பாலத்தின் ஒரு பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மாநகராட்சி ஆடுவதைக்கூடம் அருகில் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண் சற்று கீழே இறங்கியுள்ளது தெரியவந்தது. இதனால், உடனடியாக அப்பழுதை சீரமைக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நேற்று நள்ளிரவு முதல் பொன்மலை ஜி கார்னரிலிருந்து செந்தண்ணீர்புரம் வரை ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை வலதுபுற பாலம் மற்றும் சாலையை இருவழிபாதையாக்கி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அச்சாலை முழுவதும் நடுவில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன
மேலும், மதுரை, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜி கார்னர் முன்பாக வலதுபுறம் பாலத்திற்கு ஏறிச்செல்லும் வகையில் அங்கிருந்த சென்டர் மீடியன்களும், இவ்வாகனங்கள் செந்தண்ணீர்புரம் சென்று இடதுபுறம் சாலைக்கு திரும்புவதற்காக அங்கிருந்த சென்டர் மீடியன்களும் இடித்து அகற்றப்பட்டன.

அதேபோன்று, சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வரும் வாகனங்கள் ஜி கார்னர் சர்வீஸ் ரோட்டில் வந்து ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம்  அருகில் திரும்பி பாலத்தில் ஏறும் வகையில் அங்கிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.

மேலும், இப்போக்குவரத்து மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, இன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இப்பணிகள் முடிய பல நாட்கள் ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!