திருச்சியில் இன்று (ஜன, 20) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸுருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சபீக் அஹமது, சுல்பிகர் அலி, முகமது ரஷீத், பஷீர் சுல்தான், முஜிபுர் ரஹ்மான், ஹஸ்ஸான் பைஜி, தப்ரே ஆலம், பையாஸ் அஹம்மது, அப்துல் ஹக்கீம், விழுப்புரம் மண்டல செயலாளர் ஹமீது ஃபிரோஜ், வேலூர் மண்டல செயலாளர் அஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மதுரையில் வெற்றிகரமாக நடந்துமுடிந்த வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கில் அணிதிரண்டு மாநாட்டை சிறப்பித்த மக்களுக்கும், அனைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் பணிகளை முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும், ஒன் பூத் ஒன் பிராஞ்ச் என்கிற கட்சியின் இலக்கை செயல்படுத்தும் நடவடிக்கையாக தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பீகாரை தொடர்ந்து ஆந்திர மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது. ஆகவே தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்ந்தும், எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின்
கோரிக்கைகளை ஏற்றும், தமிழகத்திலும் விரைவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு சுமார் 25 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்றடையாத நிலையில், பொங்கல் தொகுப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆகவே தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு சேரும் வரையில் அதனைத் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. கடந்த சில நாட்களில் மட்டும் புதுக்கோட்டை, ராமநாதபுரத்தை 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாப்பதிலும், வெளியுறவுக் கொள்கையிலும் ஒன்றிய அரசு தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது. ஆகவே தமிழக மீனவர்களை காக்க ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.