அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு சாமி வாசனே ஓட்டிச் சென்றுள்ளார். ஏலாக்குறிச்சி ஆர்ச் வளைவு சாலையில் சத்திரத்தேரி முனியாண்டவர் கோவில் அருகே சென்றபோது, காரின்
முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து லேசாக புகை வரத் தொடங்கியதை கண்டு, காரை சாலையின் ஓரமாக நிறுத்தி, எஞ்சின் பேனட்டை சாமிவாசன் திறந்து பார்த்து உள்ளார்.
அப்போது
எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென எழுந்த தீயை கண்டு பதறியடித்து, காரை சற்று சாலையயின் ஓரமாக நிறுத்திவிட்டு,
சாமி வாசன் ஓடியுள்ளார். சிறிது நேரத்திலேயே கார் முன்பகுதி மற்றும் ஏசியின் வழியாக உள்ளே சென்ற தீ மளமளவென கார் முழுதும் கிளம்பி குபிரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அருகில் வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், கார் தீப்பற்றி எரிவதை கண்டு, அதிர்ச்சியடைந்து அங்கு ஓடி வந்துள்ளனர்.
இதனையடுத்து திருமானூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைப்பதற்குள் கார் முழுதும் எரிந்து, எலும்புக்கூடு போன்று நாசமானது.
இந்த விபத்து குறித்து திருமானூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

