சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது மனைவி வசந்தா நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென வசந்தாவைக் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிற்குள் தள்ளியது.
தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த அந்தகும்பல், அங்கிருந்த விஜயகுமார், அவரது தாய் மற்றும் 2 மகள்களைக் கயிறால் கட்டிப்போட்டது. பின்னர் வசந்தாவையும் கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 25 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினர் 5 பேரையும் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் குற்றப்பிரிவு போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள 6 பேர் கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

