தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை லட்சுமி விநாயகம் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் லோகேஷ் (19). பிஎஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (10ம் தேதி) மாலை தனது நண்பர்களுடன் மேல மானோஜிப்பட்டி பகுதியில் கல்லணை கால்வாயில் குளித்து கொண்டு இருந்தார்.
தண்ணீரின் வேகம் அதிகம் இருந்த நிலையில் லோகேஷ் மற்றும் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் லோகேஷ் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. உடன் இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் மற்றும் தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் வெளிச்சம் போதாத நிலையில் லோகேசை தேட முடியாத நிலையில் திரும்பி சென்றுவிட்டனர். தொடர்ந்து நேற்று 11 ம் தேதி காலை கல்லணை கால்வாய் ஆற்றில் லோகேஷை தேடும் பணியில் தஞ்சாவூர் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே செல்லம்பட்டி பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் ஒரு ஆண் சடலம் செல்வதாக அப்பகுதி மக்கள் தஞ்சாவூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் அந்த சடலம் கரைக்கு ொண்டு வரப்பட்டது. பின்னர் செல்லம்பட்டிக்கு லோகேஷ் உறவினர்கள் விரைந்து சென்று அது லோகேஷ்தான் என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ொண்டுள்ளனர்.