கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அவை உணவு தேடி அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குட்டிகளுடன் 12 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம். பெரிய தடாகம் பகுதியில் நுழைந்தது. அப்பகுதியில் உள்ள சுஜாதா கார்டன் பகுதியில் யானைகள் குட்டிகளுடன் சுற்றி வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
இதை அடுத்து நேற்று இரவு அந்த யானை கூட்டம் தடாகம், வீரபாண்டி பிரிவில் உள்ள ராஜ் சேம்பர் பகுதிக்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே காட்டு யானைகள் சுற்றி வருவதை அறிந்த வனத் துறையினர் விரைந்து சென்று காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் தடாகம், காளையனூர் பகுதியில் உள்ள அருள் காந்தி கோழிப்பண்ணை அருகில் உள்ள வாழை தோட்டத்தில் யானைகள் வருவதை தடுக்க அமைக்கப்பட்டு இருந்த அகழிகளை கடந்து, மின் வேலியை சேதப்படுத்தி உள்ளே புகுந்தது. அங்கு பயிரிடப்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி, தண்ணீருக்காக அங்கு அமைக்கப்பட்டு இருந்த போர்வெல் மற்றும் மோட்டர்களை சேதப்படுத்தியது.
இதனை அடுத்து யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மின் வேலி, போர்வெல், மோட்டார் மற்றும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்த தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.