ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மே 29, 30ல் மிக கனமழைக்கும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மே 29, 30ல் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
