கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர், மது போதையில் தனது சொகுசு காரை கோவையிலிருந்து காரமடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது.
ஆனால், போதையில் இருந்த செந்தில் சக்கரம் கழன்றதைக் கூட உணராமல், 3 சக்கரங்களுடன் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்றுள்ளார். தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே நிலைதடுமாறிய கார், சாலையோர சிமெண்ட் தடுப்பில் மோதி நின்றது. கார் தாறுமாறாக வந்தபோது அருகில் மற்ற வாகனங்கள் இல்லாததாலும், மோதிய இடத்தில் பொதுமக்கள் யாரும் நிற்காததாலும் பெரும் உயிர்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த காரமடை காவல்துறையினர், போதையில் இருந்த செந்திலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று சக்கரங்களுடன் சொகுசு கார் ஓடி வந்து தடுப்பில் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

