சென்னை நேற்று முன் தினம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக பலவீனமடைந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை ஒரு மீதமுள்ள சூறாவளி சுழற்சியாக குஜராத்தை அடைய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் இருந்து ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணாமாக கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழைப்பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.