Skip to content

10 வருடத்திற்கு பின் குடும்பத்தினருடன் இணைந்த வடமாநில நபர்.. பெரம்பலூரில் நெகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், தீரன் நகர் பகுதியில் வேலா கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சுற்றித்திரிவதாக கருணை இல்லத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கருணை இல்லத்தினர் கடந்த மார்ச் 23, 2015 ம் ஆண்டு பாதிக்கப்பட்ட நபரை மீட்டு அழைத்து வந்தனர். அந்த இல்லத்தில் அவருக்கு மனநல மருத்துவர்கள் மூலம் தொடர் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

தொடர்ந்து காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை பாதுகாப்பாக பரமாரித்து வந்தனர். கடந்த 10 வருடங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், ஒரு வார காலத்திற்கு முன்பாக பூரண குணமடைந்தார். இதன் பின்னர், அவரது பெயர், சொந்த ஊர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. இதில், அவரது பெயர் மதன்ஷா துர்வே (55) என்பதும், அவர் மத்தியப் பிரதேச மாநிலம், உமரேத் மாவட்டத்தில் உள்ள குர்பானி சிந்த்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இத்தகவலின் பேரில், காவல்துறையினரின் உதவியுடன் அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அவரது மகன் மற்றும் மருமகள் மத்தியப் பிரதேசத்தில் இருந்து பெரம்பலூர் வந்தனர். அப்போது, மதன்ஷா துர்வே, தனது மகன் மற்றும் மருமகளை கண்டதும் கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கொண்டார். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதனையடுத்து, நேற்று  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட  கலெக்டர் ந.மிருணாளினி முன்னிலையில், மதன்ஷா துர்வேவை அவரது உறவினர்களிடம் வேலா கருணை இல்லத்தினர் ஒப்படைத்தனர். 10 வருடம் கழித்து வடமாநில நபரை பாதுகாப்பாக ஒப்படைத்ததற்காக, அவரது குடும்பத்தினர் கலெக்டருக்கு  நன்றி தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!