Skip to content

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்-ரூ. 2கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பை மீறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறல் வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது .

2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடலிலிருந்து பாடலின் அமைப்பு நகலெடுக்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

‘சிவா ஸ்துதி’ பாடலின் உந்துதலால் (Inspired) அப்பாடலை உருவாக்கியதாக ரஹ்மான் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால், ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் பாடலைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நிரந்தரத் தடை உத்தரவையும், இழப்பீடு தருமாறும் அவர் கோரியிருந்தார்.

இந்த நிலையில், டாகரின் இடைக்கால மனுவின் மீது இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி பிரதிபா எம் சிங் , ‘வீர ராஜா வீர’ பாடல் ‘சிவ ஸ்துதி’ பாடலின் இசையமைப்பை அடிப்படையாகக் கொண்டது அல்லது ஈர்க்கப்பட்டது மட்டுமல்ல, சில மாற்றங்களுடன் உண்மையில் அதற்கு ஒத்ததாக இருக்கிறது என்று தீர்ப்பளித்தார்.

இதனால், வழக்கு நிலுவையில் உள்ள காலத்தில், ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ரூ.2 கோடியை பதிவேட்டில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ரூ.2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் ரஹ்மானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!