Skip to content

காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்

வேலுார் மாவட்டம், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் – வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா, 20. கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரின் ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா 1வது மெயின் ரோட்டில் வசிக்கிறார். பனசங்கரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்த யாமினி பிரியா, நேற்று முன்தினம் மதியம் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால் யாமினி பிரியாவை, அவரது எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மாணவி யாமினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.நேற்று காலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். ‘ஒன்றும் தெரியாத அப்பாவியான என் மகளை, அந்த பாவி கொன்றுவிட்டான். அவனை சும்மா விட கூடாது; என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும்; என் மகளை போன்று, வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வர கூடாது’ என, யாமினி பிரியாவின் தாய் வரலட்சுமி கதறி அழுதார். அவர்கள் யாமினியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதது கல்நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

மேலும் யாமினியை கொடூரமாக கொன்ற விக்னேசை பிடிக்க போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் விக்னேஷ் சோழதேவனஹள்ளியில் உள்ள ஒருவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மதியம் அங்கு விரைந்து சென்று, விக்னேசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொலை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே யாமினி பிரியாவை கொன்ற பின், விக்னேஷை பைக்கில் அழைத்துச் சென்று, சோழதேவனஹள்ளியில் தங்க வைத்த, விக்னேஷின் நண்பர் ஹரிஷ், 30, என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, ஸ்ரீராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யாமினி பிரியா தினமும் வீட்டில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறார்; எங்கு செல்கிறார்; எப்போது வருகிறார்; யாருடன் பேசுகிறார் என்பதை, விக்னேஷின் நண்பர்கள் கண்காணித்து, விக்னேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ‘வாட்ஸாப்’பில் ‘மிஷன் யாமினி பிரியா’ என்ற பெயரில் குழு உருவாக்கி, அதில் தகவலை பரிமாறியதும் தெரிய வந்தது. இந்த குழுவில் விக்னேஷ் உட்பட மேலும் சிலர் இருக்கின்றனர். அவர்களையும் கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!