தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில மாதங்களுக்கு முன்பு லாலாப்பட்டைக்கு சேர்ந்த தன்ராஜ் என்பவரை தனது பாதுகாவலராக நியமித்து கொண்டார். ஆனால் தன்ராஜின் நடத்தை சரி இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கினார். இதனால் கோபம் கொண்ட அவர் பத்து நாட்களுக்கு முன்பு மது அருந்தி ஸ்ரீகாந்த் ரெட்டி அலுவலகத்திற்கு வந்து சண்டை போட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தனது நண்பரான டேனியல் ஜோசஃப் என்பவரை அழைத்து கொண்டு ஸ்ரீகாந்த் ரெட்டி அலுவலகத்திற்கு சென்றார்.
பணியில் சேர்க்க வேண்டும் என்று கேட்டதற்கு, ‘திங்கள் கிழமைக்குப் பிறகு வா’ என்று கூறி சிறிது பணம் கொடுத்து ஸ்ரீகாந்த் அனுப்பினார். அப்போது சென்ற இருவரும் மது அருந்திய பின்னர் மாலை 5.40 மணிக்கு மீண்டும் ஸ்ரீகாந்த் ரெட்டி அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததும் திடீரென கத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் காதுகள், தொண்டை, வயிறு பகுதியில் பலமுறை குத்தியதால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு ஸ்ரீகாந்த் ரெட்டி அதே இடத்தில் இறந்தார். இதில் தன்ராஜ் தப்பி ஓடிய நிலையில் ஜோசஃப்பை அப்பகுதி மக்கள் பிடித்துக் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலை செய்த இருவர் மீது பல வழக்குகள் இருந்ததாகவும் கொலைக்கு பணம் தொடர்பான காரணங்கள் ஏதேனும் உள்ளதா? பணியில் இருந்து நீக்கியதால் கோபமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவான தன்ராஜை தேடி வருகின்றனர்.