அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் பெரிய ஆனந்தவாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 1924 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது 101 வயதை நிறைவு செய்து, 102-வது வயதில் நேற்று அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி ராமசாமியின் பிறந்தநாளை அவரது
மகன்கள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு எடுத்தனர். தாத்தாவின் பிறந்தநாளுக்கு கேக் ஆர்டர் செய்த பேரக்குழந்தைகள், நேற்று மாலை தங்களது வீட்டிற்கு முன் கேக்கை தாத்தாவை வெட்ட வைத்து கொண்டாடினர். தாத்தாவின் பிறந்தநாளுக்கு உள்ளூர் வாசிகளையும் அழைத்து, அனைவரும் இணைந்து சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
விழாவில் நிகழ்ச்சியின் கதாநாயகனாக ராமசாமிக்கு மஞ்சள் சால்வையில் பரிவட்டம் கட்டி, வாழ்த்துக்கள் கூறி, கேக் வெட்ட வைத்துள்ளனர். முகம்கொள்ளா மகிழ்ச்சியுடன் நூற்றாண்டை கடந்தும் இளமைத் தோற்றத்துடன் தனது பிறந்த நாளை அனைவரின் மத்தியில் கொண்டாடி மகிழ்ந்தார் ராமசாமி. தெருவில் வசிப்பவர்கள் ஒன்றிணைந்து ராமசாமிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்தும், அவரின் ஆசியையும் பெற்று மகிழ்ந்தனர்.
அப்போது நிகழ்ச்சிகள் பங்கேற்ற ஒரு இளைஞர், முகச்சுருக்கம் இல்லாமல், இளைஞர் போன்ற பொலிவுடன், நூற்றாண்டை கடந்தும் நடை உடையுடன் இளைஞனாக ராமசாமி வாழ்ந்து வருவதின் ரகசியம் என்ன? நீங்கள் இத்தனை வயது வரையும் ஆரோக்கியத்துடன் வாழ எண்ண உணவு உட்கொண்டீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராமசாமி, ஆட்டு வத்தல், கம்பு சோறு, வரகு சோறு, களி போன்ற இயற்கை உணவுகளையே நான் இளைய பருவத்தில் உண்டு வளர்ந்ததாலேயே இத்தனை நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடிந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் இளமை மாறாமல் அதே உற்சாகத்தோடு தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சகிதம் வாழ்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வரும் ராமசாமிக்கு பெரிய ஆனந்தவாடி கிராம மக்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

