தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார். அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரி மாற்றுத்திறனாளி 20 வயது இளம் பெண் அவரது வீட்டில் தனியாக இருந்ததை பார்த்துள்ளார். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டிற்குள் மணிகண்டன் புகுந்துள்ளார்.
திடீரென தன் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் வருவதை கண்டு அந்த மாற்றுத்திறனாளி பெண் அதிர்ச்சியடைந்தார். அதற்குள் மணிகண்டன் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து முறைகேடாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அங்கிருந்து மணிகண்டன் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி பெண் கபிஸ்தலம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆதனூரை சேர்ந்த மணிகண்டன் என்று தெரிய வந்தது. இதையடுத்து கபிஸ்தலம் போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.