கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அன்னூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கு பார்த்திபன் 5 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர் பல இடங்களில் கஞ்சா விதைகளை தூவி கஞ்சா வளர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததையும் தெரிந்து கொண்டனர். இதை அடுத்து கஞ்சா செடியை பிடுங்கி எடுத்தனர். மேலும் கஞ்சா செடிகள் வளர்ப்பதற்காக வைத்து இருந்த விதைகளையும், ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.