Skip to content

ஆடிப்பெருக்கு : பேரூர் படித்துறையில் புனித நீராட குவிந்த மக்கள்

 

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனித நீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்து போன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு இலைப்படையல் வைத்து, 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து படையல் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.

இதன் காரணமாக பேருந்துகளில் ஏராளமான பொதுமக்கள் பேரூர் நொய்யல் ஆற்றுக்கு வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ஆற்றுப் பகுதியில் குவிந்தனர். நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் அமர்ந்து இறந்து போன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல்

வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்கு இருந்த பசுமாடு, கன்றுகளுக்கு அகத்திக் கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்து இருந்த சாதுக்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானங்களை வழங்கினர்.

அங்கு வரும் பக்தர்கள் உணவுப் பொருட்களை நீர் நிலைகளில் கொட்டி வீணடிக்காமல் இருப்பதற்காக, 50 க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள், அதனைப் பெற்று ஆதரவற்ற இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கும் விதமாக அவற்றை சேகரித்து வரும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் புதுமண தம்பதிகள் தாலியை மாற்றிக் கொண்டனர். இதேபோல் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆற்றில் புனித நீராடி விட்டு பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா என்பதால், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பேரூருக்கு வரத் தொடங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது அதனை காவல் துறையினர் சரி செய்து வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!