மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் அமைந்துள்ளது ராஜபத்ரகாளி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ராஜபத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோயிலின் முன்பு கோயில் பூசாரி வினோத்ராஜா மூன்று அடி நீளம் உள்ள மூன்று அறிவாள்களில் சுருட்டு புகைத்தவாறு ஏறி நின்று ஆக்ரோஷமாக நடனம் ஆடினார்.
தொடர்ந்து கோயில் பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். முன்னதாக ஆட்டுக்கிடாய் வெட்டப்பட்டு கறிசோறு சமைத்து அதை கோயில் பூசாரி சாப்பிட்ட பிறகு பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தினர்.
