உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், கடந்த 5-ந்தேதி பாலேஷ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்த நர்சுகள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர். அவ்வாறு செலுத்தப்பட்ட ஒரு ஊசியால், குழந்தையின் கையில் வீக்கம் ஏற்பட்டு, நீல நிறமாக மாறியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் குழந்தையின் கையில் பேண்டேஜ் அணிவித்து வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், குழந்தையின் கையில் ஏற்பட்ட வீக்கம் நாளுக்கு நாள் மோசமடைய தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் கூறிய மருத்துவமனைக்கு சென்றபோது, மீண்டும் வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் குழந்தையின் கை மிக மோசமாக பாதிக்கப்பட்டு அழுகிய நிலைக்கு செல்லத் தொடங்கியுள்ளது. இதையடுத்து குழந்தையின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதால் தனது குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.
இந்த சூழலில், பாதிக்கப்பட்ட குழந்தையின் கையை ஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.