இறுதிப் போட்டியில், 38 வயதான ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை வீழ்த்திய 19 வயதான நாக்பூரை சேர்ந்த திவ்யா தேஷ்முக் ஆனந்தக் கண்ணீருடன் வெற்றியைக் கொண்டாடினார். சாம்பியன் பட்டம் வென்ற திவ்யாவுக்கு ரூ.43.24 லட்சம் பரிசுத் தொகையும், 2-வது இடத்தை பெற்ற கோனேரு ஹம்பிக்கு ரூ.30.26 லட்சம் பரிசுத் தொகையும் கிட்டியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் திவ்யா கிராண்ட் மாஸ்டர் டைட்டிலை பெற்றார். கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்றால் சர்வதேச செஸ் சம்மேளனம் அங்கீகரிக்கும் பல போட்டிகளில் அவர் டைட்டில் வென்றிருக்க வேண்டும். ஆனால் திவ்யா அதை எல்லாம் பெறாவிட்டாலும், உலக கோப்பையை வென்றதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆகி விட்டார். திவ்யா இந்தியாவின் 88வது கிராண்ட் மாஸ்டர் ஆவார். பெண்களின் இவர் 4வது கிராண்ட் மாஸ்டர்.
திவ்யா தேஷ்முக் கிராண்ட் மாஸ்டர் ஆனதும், தனது வெற்றியை ஒரு விதி என்று குறிப்பிட்டார். ஏனெனில், கிராண்ட் மாஸ்டர் ஆவதற்குரிய விதிமுறைகளை அவர் இதுவரை பெறவில்லை என்றாலும், உலகக் கோப்பையை வென்றதன் மூலம் நேரடியாக அந்த பட்டத்தை பெற்றுள்ளார். “ஓ, நான் எப்போது என் விதியை பெறுவேன்?” என்று நினைத்ததாகவும், இப்போது கிராண்ட் மாஸ்டர் ஆனதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்த போட்டிக்காக என்னை நன்றாக தயார் படுத்தி கொண்டேன். இது முக்கிய பங்கு வகித்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் நான் பட்டம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனது சாதனை பயணம் தொடரும். எனக்கு அதிர்ஷ்டம் இருந்துள்ளது. அதனால் தான் உலகின் 5வது இடத்தில் உள்ள ஹம்பியை வென்று இருக்கிறேன் என்றார்.
திவ்யாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.