Skip to content

அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அமினுல் இஸ்லாம் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதம் தொடர்பான தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்காக ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அப்போதே அவரது கருத்திலிருந்து ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் பகிரங்கமாக விலகி நின்றார்.

இதனால் கட்சிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அமினுல் இஸ்லாம், நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கரீம் உதின் பர்புயா, அப்துல் அஜிஸ் மற்றும் ஜாகிர் உசேன் லஸ்கர் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் விலகிய நிலையில், தற்போது 4வது நபராக அமினுல் இஸ்லாம் வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அமினுல் இஸ்லாம் கூறுகையில், ‘கட்சியின் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். மன்காச்சார் தொகுதி மக்களின் விருப்பப்படியே எனது அடுத்தகட்ட அரசியல் பயணம் அமையும்’ என்று தெரிவித்தார். தற்போது அவர் பாஜக கூட்டணியில் உள்ள அசாம் கண பரிஷத் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!